தமிழ்த் தேசியம் சில விளக்கங்கள் சில வினாக்கள்


தமிழன் பரந்து விரிந்த நிலத்திற்குச் சொந்தக்காரன் என்றாலும் தற்போது அவன் எல்லை குமரிக்கும் திருத்தணிக்கும் குறுகிவிட்டது. அப்பகுதியைத் தமிழ்த் தேசியமாக நாம் வென்றெடுக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக எழுகிறது. அது நியாயமான உணர்வு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தேசிய ஒருமைப்பாடு என்ற உணர்வில் வளர்ந்த காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகள் இதில் முரண்படலாம்.
சரி. அப்படிப்பட்ட தமிழ்த் தேசியம் எப்படிப்பட்டது? இதற்கு முதலில் வரையறை வேண்டும்.
தமிழ்த் தேசியத்தில் வாழும் தமிழர்கள் யார் என்பதற்கு என்ன வரையறை? ஆரியப் பார்ப்பனர்கள் தமிழ் பேசுவதால் அவர்களைத் தமிழர்கள் என்று தமிழ்த் தேசியம் ஏற்றுக் கொள்கின்றதா?
தமிழ்த் தேசியத்தில் மதநம்பிக்கையாளர்களுக்கு இடம் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவர்கள் இந்துத்வா வாதிகளாய் இருந்து, தமிழர்களையே இஸ்லாமியர், கிறித்தவர் என்று பிரித்து, வெறுத்தால் அதற்குத் தீர்வு என்ன? அப்படிப்பட்ட இந்துத்வா தமிழர்கள் தமிழ்த் தேசியத்தில் ஏற்கப்படுவார்களா? விரட்டப்படுவார்களா? விரட்ட வாய்ப்புள்ளதா?
மதம், கடவுள் என்பதை தனிப்பட்ட நம்பிக்கையாகக் கொண்டு அதற்குச் சட்ட சலுகையோ, பொது ஏற்பளிப்போ இல்லை என்பதை உறுதி செய்து, நடைமுறைப்படுத்த தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஏற்க அவர்கள் பண்பாட்டு ரீதியாக, உளவியல் ரீதியாகப் பக்குவப்படுத்தப்பட்டுள்ளார்களா? பக்குவப்படுத்த திட்டங்கள் யாவை?
ஜாதி உணர்வுள்ள தமிழர்களைக் கொண்டு தமிழ்த் தேசியம் அமைக்க முற்படும்போது, அந்த உணர்வுகள் அதைக் குலைத்து அழித்துவிடாதா? ஜாதியை ஒழித்த பின்தான் தமிழ்த் தேசியம் என்பதும் சாத்தியம் இல்லை என்னும்போது, ஜாதி உணர்வாளர் குறித்துத் தமிழ்த் தேசியத்தின் நிலைப்பாடு என்ன?
பெண்ணுரிமை, பெண் விடுதலை குறித்துத் தமிழ்த் தேசியவாதிகளுக்குத் தெளிவான கருத்தும், பார்வையும், பக்குவமும் உண்டு என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், தமிழ்த் தேசியம் அமைக்கும் முயற்சியில் இதைப் பற்றிய திட்டமிட்ட, தெளிவான கொள்கை முடிவு வகுக்கப்பட்டுள்ளதா? இதைச் செயல்படுத்த மக்கள் பக்குவப்படுத்தப்பட்டுள்ளனரா?
பெண்ணுரிமையில், பெண் விடுதலையில் மதம் குறுக்கிடும்போது, மதவிதிகளை மறுத்து மனிதநேய உரிமைகளைச் செயல்படுத்த, மதவாதிகளுடனான அணுகுமுறை, தீர்வுகள் குறித்த தெளிவு உள்ளதா? திட்டங்கள் எவை?
பொருளாதார அடிப்படையில் சமதர்ம நோக்கில் பொதுவுடைமையா? கலப்புப் பொருளாதாரமா? முதலாளித்துவ அணுகுமுறையில் உலகமயமாதலில் கலந்துவிடுவதா? இதில் தமிழ்த் தேசியத்தின் கொள்கைகள் எவை? நிலைப்பாடுகள் யாவை?
மொழிக் கொள்கையில் தமிழ்த் தேசியத்தின் நிலை என்ன? குறிப்பாகத் தொடர்பு மொழி பற்றிய தெளிவு என்ன?
இந்தியாவிலிருந்து தமிழ்த் தேசியம் பிரிக்கப்படுமா? அல்லது. மத்திய அரசின் கட்டுக்குள் முழுச் சுதந்திரம் பெற்ற பகுதியாகச் செயல்படுமா?
இந்தியாவிலிருந்து பிரித்துத் தமிழ்த் தேசியம் அமைக்கப்படும் எனின் அதை அமைக்க என்ன செயல்திட்டம்! மக்களைத் திரட்டி, வாக்கெடுப்பின் அடிப்படையில் அய்.நா. மன்ற அங்கீகாரத்துடன் தமிழ்த் தேசியம் அமைப்பதா?
அல்லது தமிழ் மக்களை ஒன்று திரட்டி, போராடி, மத்திய அரசின் ஒப்புதலோடு பிரிந்து செல்வதா?
அல்லது ஆயுதப் போராட்டம் நடத்தி, இராவத்தை எதிர்கொண்டு உயிர்களைப் பலி கொடுத்து வெற்றியோ தோல்வியோ முயன்று பார்ப்பது என்ற செயல் திட்டமா?
உலகமயமாதலின் விளைவால் தனித் தேசியங்கள் அமைத்தல் என்னும் உளநிலை, உணர்வு நிலையில் பெருமளவு மாற்றங்கள் மக்களிடையே வந்துவிட்ட நிலையில் தனித் தமிழ்த் தேசியம் என்ற முயற்சி நடைமுறைச் சாத்தியமா?
அல்லது உலக ஓட்டத்திற்கு ஏற்ப உலகே ஒருநாடு, ஒரே ஆட்சி என்று உலக மக்களையே உடன்பிறப்பாகக் கொண்டு உறவாகக் கொண்டு, உலக மக்கள் அனைவரும் ஒரே ஜோதியில் கலந்து விடுவதா?
அப்படிப்பட்ட நோக்கில் இன்றைக்குக் கிராமப்புறங்களில் கூட, வேறு நாடு, வேறு இனம், வேறு மொழியினரோடு மண உறவு கொள்ளும் மனபக்குவம், ஏற்பு நிலை எளிதாகிவிட்ட நிலையில் அதற்கேற்ப யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற நிலை ஏற்பதா? உவகை ஒரு நாடாகப் பார்ப்பதா?
இது உன் பண்பாடு, இது என் பண்பாடு என்று பரம்பரைப் பண்பாட்டைப் பாதுகாக்க, செயல்படுத்த முனைவதைவிட உலக மக்கள் முழுமைக்குமான காலத்திற்கேற்ற கலாச்சாரங்களைக் கைக் கொள்வது அறிவுக்கு உகந்த செயலாக இருக்குமா?
தமிழர் பண்பாடு, ஆரியர் பண்பாடு, அய்ரோப்பியர் பண்பாடு, சீனர் பண்பாடு என்பதெல்லாம், உலகு ஒரு நாடு என்று சுருங்கி வரும் நிலையில் எதிர்காலத்தில் தாக்குப் பிடிக்குமா? நிலைக்குமா?
1500, 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் மதத் தலைவர்கள் உருவாக்கிய மார்க்கங்கள் எக்காலத்திற்கும் கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று மதவழி நின்று வாழ நினைக்கும் மக்களுக்கு, மொழித் தேசியமும், உலக மயமாதலில் ஒரே கலாச்சாரம் அல்லது விரும்பிய கலாச்சாரம் என்பது ஏற்புடையதல்ல என்னும் நிலையில், எதிர்கால வாழ்வியலை, தேசியத்தை காலந்தான் தீர்மானிக்குமேயன்றி, நாம் கட்டமைக்க அல்லது கட்டிக் காக்க நினைப்பவை சாத்தியப்படாது என்று நம் உள்ளத்தில் எழும் உணர்வை, கேள்வியை, யதார்த்த சூழலை ஒதுக்கித் தள்ளிவிட்டு, உணர்வுவயப்பட்ட நிலையில் தேசியப் பார்வையிலோ மதப் பார்வையிலோ செல்ல நினைப்பது அறிவுக்கு உகந்ததாகுமா?
எதிர்காலத்தில் மோதப் போகும் முடிவுகள் மூன்று. ஒன்று, மதக் கோட்பாடுகள்படியான வாழ்வு முறையைக் கட்டமைக்க முயலுவோர்; இரண்டு, மொழிவழி தேசியத்தை உருவாக்க முயலுவோர், மூன்று உலக மக்கள் எல்லாம் ஒன்று, மொழி என்பது கருத்துப் பரிமாற்றக் கருவி, மணவுறவும் இருப்பிடமும் உலகில் எங்கும், எப்பகுதியிலும் நிகழலாம். உலகே ஒரே ஆளுகையில் ஒரே நாடாக மாற வேண்டும் என்ற விருப்பம் உடையோர். இம்மூன்றும் போட்டியிடுவதை யாரும் தடுக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது. இப்படிப்பட்ட அறிவியல் சார்ந்த உலகில், உணர்வு சார்ந்த அடையாளங்களுக்காக அவற்றைக் காக்க மனிதனைக் கட்டுக்குள் வைக்க முடியுமா? மனித உணர்வுகளை மரபு மற்றும் மத அடையாளங்களுக்கு, கோட்பாடுகளுக்குப் பலி கொடுக்க முடியுமா? என்ற நடைமுறை சார்ந்த வினாக்களுக்கு விடை காணாமல் ஆளுக்கு ஒரு கொள்கையை எடுத்துக் கொண்டு மக்களை வதைப்பது, வளைப்பது சரியா?
இன்றைய உலகில் எந்த ஒரு இனமும் தூய இனம் அன்று. எல்லாம் கலவை இனங்களே. அப்படிப்பட்ட நிலையில் மனிதன் என்ற பார்வையில் உலகோர் அனைவரையும் நோக்கினால் அதுதானே சரியாகும்? நடைமுறைக்கும் பகுத்தறிவிற்கும் காலத்திற்கும் ஏற்ற கொள்கையை ஏற்பது, மற்றதை மறுப்பது, மறப்பது என்பதுதானே சரியாகும்?
உலக மக்களை ஆதிக்கம் செலுத்துவோர் செலுத்தப்படுவோர் என்று பிரித்துப் போரிடுவது, ஆதிக்கம் அழிப்பது, சம உரிமை பெறுவது, தன்மானம் காப்பது என்பது தானே சரியாகும்?
அப்படியாயின் ஆதிக்கம் இனவழியோ, மொழி வழியோ, மதவழியோ, சாத்திர வழியோ, பால்வழியோ, பொருளாதார வழியோ, இராணுவ வழியோவரின், அவற்றைத் தகர்ப்பதுதானே புரட்சியாளர்களுக்கு அடையாளம்?

ஆக, இவற்றையெல்லாம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வராமல், இன ஆதிக்கத்தினின்று தமிழர்களை மீட்ட ஒரு இயக்கத்தை, ஒரு தலைவரைக் கொச்சைப்படுத்திக் குழப்பம் உண்டாக்குவதை, நன்றி மறப்பதை எல்லோரும் சேர்ந்து கண்டிக்க வேண்டும் அல்லவா? எனவே, ஆரியத்திடம் விழிப்போடிருந்து, ஆக்கபூர்வமாய், அறிவுப் பூர்வமாய் சிந்திப்போம், செயல்படுவோம்! காலத்திற்கேற்ப களம் காண்போம்!

நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
- ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

அய்யாவின் இறுதிப் பேருரை பகுதி - 2

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!